Blog

November:2021
நாம் முடியாட்சியல்ல, நாம் ஒரு குடியரசு – நாம் அவ்வாறே தொடர்ந்திருப்போமா?

– Dr. சகுந்தலா கதிர்காமர்

“நாம் முடியாட்சியல்ல, நாம் ஒரு குடியரசு.”

கௌரவ திரு அலி சப்ரியின் வார்த்தைகள் வாசிப்பதற்கும் கேட்பதற்கும் புளகாங்கிதமாக இருக்கின்றன. எவ்வாறாயினும், இலங்கையில் ஜனாதிபதிகள் தாம் முடிமன்னர்கள் என, அல்லது முடிமன்னர்களாக உருவாகிவருபவர்கள் என, அல்லது தமது நடவடிக்கைகளுக்கு வகைப்பொறுப்புக் கூறத் தேவையற்றவர்கள் என அறிவீனமாக நம்பினால், அதற்கான காரணம் அவர்களை அவ்வாறு நம்புவதற்கு அனுமதிக்கும் அவர்களைச் சுற்றியுள்ள கொத்தடிமைகளே என்பதை அமைச்சர் அலி சப்ரிக்கு நினைவூட்டுவது சாலப் பொருத்தமானதாகும். வரலாற்று ரீதியாக, தலைவர்களின் பெருமிதப் பகட்டுக் கனவுகளுக்குத் தீனிபோட்டு அவர்களின் பிழையாத்தன்மையினை மேம்படுத்தும் கொத்தடிமைகளில் மிகப் பெரும்பான்மையானவர்கள் இவ்வாறான தலைவர்களின் உள்வட்டத்தின் அங்கமாகவே இருந்து வருகின்றனர். ஜனாதிபதிகளினதும் பிரதமர்களினதும் சர்வாதிகார எத்தனிப்புக்கு அல்லது முடிமன்னர் எத்தனிப்புக்கு  அமைச்சரவையிலும் பாராளுமன்றத்திலும் உள்ள கொத்தடிமைகளும் அரசியல் கட்சிகளினுள் உள்ள பிரதான இயக்குனர்களும் ஆதரவு வழங்கி வருகின்றனர்.

இலங்கைப் பிரசைகள் அவர்களின் உரிமைகள் பற்றி நன்கறிவர். மன்னன் ஒருவனால் ஆளப்படுபவர்களாக மாறாமல் இருப்பதற்கான அவர்களின் விருப்பம் இத்தலைவர்களை அவர்கள் ஆட்சியில் இருந்து காலத்திற்குக் காலம் தூக்கியெறிந்த வரலாற்றின் மூலம் நிரூபிக்கப்படுகின்றது. ஜனாதிபதி எத்தனை தடவைகள் பதவி வகிக்கலாம் என்பதற்கான வரம்பினை அகற்றுவதற்காக அரசியலமைப்புக்கான 17 வது திருத்தத்தினை மஹிந்த ராஜபக்ச தூக்கிப்பிடித்து ஆதரித்தபோது அவரின் அமைச்சரவையில் இருந்தும் பராளுமன்றத்தில் இருந்தும் அவரின் கட்சியில் இருந்தும் அவருக்கு ஆதரவு வழங்கப்பட்டதையும் தாண்டி அவர் 2015 தேர்தலில் தோல்வியடைந்தார். அமைச்சரவையும் பாராளுமன்ற உறுப்பினர்களும் உயர் நீதிமன்றமும் கூட திருத்தத்தினை நியாயப்படுத்துவதற்காகக் கற்பனைத்திறன் மிக்க வாதங்களைக் கண்டுபிடித்து தேர்தல்களில் சதாகாலமும் போட்டியிடுவதற்கான ஜனாதிபதியின் உரிமை வாக்காளரான மக்கள் குழுமத்தின் சுதந்திரத்தினை மேம்படுத்துகின்றதென மக்களுக்கு உத்தரவாதம் வழங்கியபோது கொத்தடிமைத்தனம் நிச்சயமாக அதன் உச்சத்தில் இருந்தது.

மக்கள் கோதபாய ராஜபக்சவுக்கு கட்டற்ற அதிகாரத்தினை வழங்கவில்லை. அவருக்குப் பாராளுமன்றத்தில் உறுதியான ஆதரவு இருக்கின்றது. ஆனால் அவருக்கு முன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலம் இல்லை. இருப்பினும் பரிவும் பதவியும் தேடும் அடிவருடிகளான கொத்தடிமைகள் அவருக்குப் பெரும்பான்மையினைப் பெற்றுக்கொடுப்பதற்காகக் கட்சி தாவியுள்ளனர் –  அந்தப் பெரும்பான்மையானது மக்களால் வழங்கப்பட்டதல்ல. அரசியலமைப்புக்கான 20 வது திருத்தத்தின் மூலம் கிடைத்த அதிகாரத்தினைக் கையில் ஆயுதமாக வைத்துக்கொண்டு தான் வகைப்பொறுப்புக்கு அப்பாற்பட்டவர் என ஜனாதிபதி நம்பிக்கொண்டிருக்கின்றார். 20 வது திருத்தம் ஜனாதிபதி என்ற ரீதியில் அவரின் அதிகாரங்களை மாத்திரம் அதிகரிக்காமல் இரட்டைப் பிரசாவுரிமை கொண்ட அவரின் சகோதரர் அரசியல் வானில் உள்வாங்கப்படுவதற்காக விசேடமாக வடிவமைக்கப்பட்ட ஒரு பாதையினையும் வழங்கியிருக்கின்றது.

இந்த விடயத்தில் ஜனாதிபதி ஜே ஆர் ஜயவர்தன மற்றொரு வழிகாட்டியாக இருக்கின்றார். தனது அமைச்சர்களிடம் இருந்து அவர்களின் ஒப்பமிடப்பட்ட ஆனால் திகதியிடப்படாத ராஜினாமாக் கடிதங்களைப் பெற்றுக்கொண்டு அதில் திகதியினை மட்டும் போட்டு அவர்களை வீட்டுக்கு அனுப்பிவைப்பதைத் தனது தற்றுணிபுக்கு விட்டுவிட்ட செயல் மூலம் மனிதனையும் எலியாக மாற்றும் தனது உள்ளார்ந்த ஆற்றலை அவர் எடுத்துக்காட்டியிருக்கின்றார். ஜனாதிபதி ஜயவர்தன, நன்கு பயிற்றப்பட்ட தொழில்வல்லுனர்களையும் பிரதமர் பிரேமதாச, லலித் அதுலத்முதலி, காமினி திசநாயக மற்றும் ரொனி த மெல் உள்ளிட்ட முதிர்ந்த அரசியல்வாதிகளையும் உள்ளடக்கிய பலம் வாய்ந்த அமைச்சரவையினைக் கொண்டிருந்தார். இருந்தாலும் இந்த ஜாம்பவான்களெல்லாம் அந்தக் கடிதங்களில் கோழைத்தனமாக ஒப்பமிட்டனர். இது ஜயவர்தனவின் ஒருதலைப்பட்சப் பாங்கிலான அரசாங்கத்திற்கு அத்திவாரமிட்டது.

அரசாங்கத்தின் இந்த ஒருதலைப்பட்சப் பாங்கின் ஆபத்துக்களையும் வலிகளையும் நாம் அனைவரும் கடநத் வருடம் அனுபவித்தோம். ஜனநாயகக் குடியரசு அரசாங்கத்தின் அசைக்கமுடியாத பண்புகளான சட்டத்தின் ஆட்சி, அரசியலமைப்பியல், உள்ளடக்கம், கூட்டொருமை ஆகியவை துடைத்தெறியப்பட்டன. பொதுமக்கள் கலந்தாலோசிப்பும் அரச கொள்கை மற்றும் சட்டவாக்கத்தின் வரைபு மற்றும் மீளாய்வின் போதான நிபுணத்துவ உள்ளீடுகளும் அரசாங்கத்தின் திட்டங்களை அமுல்படுத்துவதற்கான நடுநிலையான பணித்துறை ஆட்சியும் ஓரங்கட்டப்பட்டு, அடிவருடிகளையும் இராணுவத்தினையும் அல்லது ஓய்வுபெற்ற இராணுவ ஆளணியினையும் பெருமளவுக்குக் கொண்ட செயலணிகள் வகைதொகையின்றித் தாபிக்கப்பட்டன.  அரசியல்மயமாக்கலை நோக்கியும் இராணுவமயமாக்கலை நோக்கியும் குடிமைப் பரப்புக்கள் தெளிவாக அடித்துச் செல்லப்படுகின்றன.

ஜனாதிபதி கோதபாய ராஜபக்சவுக்கு மக்களின் ஆணை உள்ளது என எமக்கு அடிக்கடி நினைவூட்டப்படுகின்றது. உண்மையில், எல்லா ஜனாதிபதிகளுக்குமே இருப்பது மக்களின் ஆணைதான். இதுவொன்றும் தனித்துவமானது அல்ல. எவ்வாறாயினும், அந்த ஆணை எமது நலன்களினுள் ஆளுகை செய்வதற்கும் அவர் எந்த ஜனநாயகச் சட்டகத்தின் மூலம் பதவிக்கு வந்தாரோ அந்தச் சட்டகத்தினுள் ஆளுகை செய்வதற்குமான வரையறுக்கப்பட்டதும் தற்காலிகமானதுமான ஆணையாகும். இது அரசியல் முஷ்டி மடக்குவதற்கும் தான்தோன்றித்தனமாக ஆட்சி செய்வதற்குமான கட்டற்ற ஆணையல்ல. ஆனால் அதிகரித்த அளவுக்கு நடப்பதென்னவோ  இதுதான் என்பது இப்போது தெரியவருகின்றது.

பெருந்தொற்று என்ற போர்வையிலும் பொருளாதார நெருக்கடி என்ற போர்வையிலும், இலங்கையின் அரசியல் பொருளாதாரத்தின் அடிப்படையினை ஆட்டங்காணச் செய்யும் பரந்த செயல்விளைவுடைய தீர்மானங்கள் எடுக்கப்படுகின்றன. அரசியல் ஆதரவினை அனுபவித்துக்கொண்டு இந்த நெருக்கடிகளின் போர்வையின் கீழ் தம் வயிறு வளர்க்கும் உள்நாட்டையும் வெளிநாட்டையும் சேர்ந்த திருட்டுப் பெருந்தகைகள் பற்றி நாம் அறிந்தாலும் அவர்களைத் தடுத்து நிறுத்த முடியாதவர்களாக இருக்கின்றோம். இவர்கள் பரந்த சுதந்திரங்களை அனுபவித்து வருகின்றனர் – கொள்வனவு விதிகளில் இருந்து சுதந்திரம், வகைப்பொறுப்பில் இருந்து சுதந்திரம். இலங்கையின் தேசிய சொத்துக்கள் அற்ப சொற்ப லாபங்களுக்காக எவ்வித பரிசீலிப்புக்களும் அற்ற விதிகளின் கீழ் வழங்கப்பட்டு வருகின்றன.

கடந்த வருடம் இலங்கைப் பிரசைகள் பல அதிர்ச்சிகளுக்கு முகங்கொடுத்தனர். பெருந்தொற்றினால் நாம் வீடுகளுக்குள் முடக்கப்பட்டோம். பல மக்கள் அவர்களின் தொழில்களை இழந்தனர். பிள்ளைகளின் கல்வி அந்தரங்கத்தில் ஊசலாடுகின்றது. பொருளாதாரம் சரிவடைந்து வருகின்றது. தமக்கு வழங்கப்பட்டுள்ள பணி பற்றி எதுவுமே தெரியாத அல்லது அது பற்றிய அனுபவமற்ற ஆனால் பலத்தைப் பிரயோகிப்பதில் மட்டும் கில்லாடிகளான செயலணிகளால் எம் வாழ்வு கட்டுப்படுத்தப்படுகின்றது.

மக்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். உடனடியாகச் சேதனப் பசளைக்கு மாறுவது என்ற தன்னிச்சையான தீர்மானம் விவசாயிகளைக் கொந்தளிக்கச் செய்துள்ளது. தற்போதைய வடிவத்தில் இதன் சாத்தியத்திற்கு எதிராகப் பேசுவதற்கு விவசாயத் துறை நிபுணர்களை இது கொந்தளிக்க வைத்துள்ளது. ஆசிரியர்களின் நியாயமான கோரிக்கைகளைப் பரிசீலிக்க அரசாங்கம் மறுத்தமை அவர்கள் பணிநிறுத்தத்தினைத் தொடங்குவதற்கு அவர்களை வலுப்படுத்தியிருக்கின்றது. சக்தித் துறையில் மேற்கொள்ளப்பட்ட போலியான கொடுக்கல் வாங்கல்கள் மின்சாரப் பணியாளர்கள் பணி நிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்க அவர்களைத் தூண்டியுள்ளது. ஒரு நாடு – ஒரு தேசம் பற்றிய ஜனாதிபதி செயலணியின் தலைவராகச் சங்கைக்குரிய ஞானசார தேரரை நியமிப்பது என்ற தீர்மானம் நீதி அமைச்சரைக் கொந்தளிக்கச் செய்துள்ளது.

தேரரின் நியமனம் இது தொடர்பான நீதி அமைச்சின் பணிகளைக் கீழறுக்கின்றது. நீதிமன்றத்தினை அவமதித்தமைக்காக வழங்கப்பட்ட குற்றத்தீர்ப்பு, சிறுபான்மையினருக்கு எதிரான அவரின் தோற்றப்பாடு, குறிப்பாக முஸ்லிம்களுக்கு எதிராகத் தூண்டிவிடும் அவரின் போக்கு ஆகியவை சட்டத்தின் ஆட்சிக்கான எக்கடப்பாட்டினையும் கீழறுக்கின்றது.

இலங்கை ஒரு குடியரசேயன்றி முடியாட்சியல்ல என அமைச்சர் சப்ரி இப்போது வலியுறுத்தினாலும், தெளிவற்றதும் ஆபத்துமிக்கதாக இருக்கும் சாத்தியத்தினைக் கொண்டதுமான அரசியலமைப்பு வரைபுச் செயன்முறையின் விளிம்பில் நாம் நிற்கின்றோம். ஜனநாயக ஆளுகையின் கட்டமைப்புக்கள் அபாயநேர்வில் இருக்கின்றன. இதுவரையில் அரசியலில் இருந்து இராணுவத்தினைப் பிரித்துவைத்தமை, மொழி உரிமைகள் மூலமும் தன்னாட்சி மூலமும் சிறுபான்மையினரை உள்ளடக்கும் கடப்பாடுகள் மற்றும் அரசியலில் சமயக் குறவர்களின் வகிபாத்திரம் ஆகியவையும் மீள்வரைவிலக்கணப்படுத்தப்படலாம். இந்த மாற்றங்களுடன் ஜனநாயத்தில் எமது ஏழு தசாப்த முதலீட்டில் இருந்து நாம் விலகிச் செல்கின்றோம்.

November 2021 Tuesday 16th